மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு 2 மகள்களுடன் தீக்குளிக்க வந்த முதியவரால் பரபரப்பு

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு 2 மகள்களுடன் தீக்குளிக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-11-06 23:00 GMT
வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக வழங்கினர். கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மனு கொடுக்க வந்த பொதுமக்களை அவர்கள் சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். அப்போது முதியவர் ஒருவர் தனது 2 மகள்களுடன் வந்தார். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேன் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த முதியவரின் பெயர் பெருமாள் (வயது 60) என்பதும் அவருடன் வந்தவர்கள் அவரது மகள்கள் காமாட்சி (35), களஞ்சியம் (33) என்பதும், அரக்கோணம் சைனாபுரத்தில் வசிப்பவர்கள் என்பதும் தெரியவந்தது.

போலீசாரிடம் பெருமாள் கூறியதாவது:-

எனது மகன் வெங்கடேசன் கடந்த 3-ந் தேதி அரக்கோணத்தை அடுத்த சேந்தமங்கலத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்ததாக அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் எனது மகன் வெங்கடேசன் சாவில் சந்தேகம் உள்ளது. வெங்கடேசனை அவரது மனைவி சூரியாவின் முதல் கணவர் தான் கொலை செய்திருக்க வேண்டும். சூரியா எனது மகனை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

எனினும் முதல் கணவரோடு அவர் தொடர்பில் இருந்தார். இது குறித்து எனது மகனுக்கு தெரிந்ததால் ஏற்பட்ட தகராறில் தான் எனது மகனை சூரியாவின் முதல் கணவர் கொலை செய்திருக்க வேண்டும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொதுமக்களுக்கும், பொதுச்சொத்திற்கும் சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் பெருமாள் மற்றும் அவரது 2 மகள்கள் காமாட்சி, களஞ்சியம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த மினி லாரி டிரைவர் ஜீவா (56) அவரது மனைவி சாந்தியுடன், குறை தீர்வு கூட்டத்திற்கு வந்திருந்தார். அதிகாரிகளிடம் அளித்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான், வேலூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கடன் வாங்கினேன். குறிப்பிட்ட காலத்தில் அந்த கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டேன். ஆனாலும், கடன் தொகை முடியவில்லை. மேலும் வட்டித் தொகை செலுத்த வேண்டும் என்று நிதி நிறுவனம் தரப்பில் மிரட்டல் வருகிறது. எனக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். குடும்பம் வறுமையில் உள்ளது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலூர் அருகே உள்ள கீழ் அரசம்பட்டு, பாலாத்து வண்ணான், கத்தாழம்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கொடுத்துள்ள மனுவில் ‘எங்கள் பகுதியில் ஏற்கனவே 2 கல்குவாரிகள் உள்ளன. இந்த நிலையில் மேலும் ஒரு புதிய கல்குவாரி அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே எங்கள் பகுதியில் புதிய கல்குவாரி அமைக்க கூடாது’ என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்