ஆதனூர், வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றின் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நந்திவரம் ஏரி, ஆதனூர் ஏரி உள்பட பல்வேறு ஏரிகள், தாங்கல் பகுதிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

Update: 2017-11-06 22:45 GMT

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நந்திவரம் ஏரி, ஆதனூர் ஏரி உள்பட பல்வேறு ஏரிகள், தாங்கல் பகுதிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் ஆதனூர், ஊரப்பாக்கம், வரதராஜபுரம் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்தது. குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.

வெள்ள பாதிப்புகளை பார்க்க வந்த அதிகாரிகளிடம், அடையாறு ஆற்றின் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

இதையடுத்து நேற்றுமதியம் காஞ்சீபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, அருண் தம்புராஜ் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய் துறையினர் ஆதனூர், கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம், வரதராஜபுரம் ஆகிய பகுதியில் உள்ள அடையாறு ஆற்றின் கால்வாய்களை ஆய்வு செய்தனர். உடனடியாக கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டி இருந்த ஒரு சில கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஆதனூர், மண்ணிவாக்கம், வரதராஜபுரம் வழியாக செல்லும் அடையாறு ஆற்றின் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அளவீடு செய்யும் பணி நடைபெறும். அதைதொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்