காஞ்சீபுரம் மாவட்டத்தில் பலத்த மழை: மாமல்லபுரம் புலிக்குகையில் தண்ணீர் புகுந்தது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மாமல்லபுரம் புலிக்குகையில் தண்ணீல் புகுந்தது.

Update: 2017-11-06 23:00 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு காஞ்சீபுரம், மாமல்லபுரம், வண்டலூர் உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.

நேற்றுமுன்தினம் இரவு காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:–

கேளம்பாக்கம்–61.20, செங்கல்பட்டு–56.50, உத்திரமேரூர்–28, திருக்கழுக்குன்றம்–22.80, காஞ்சீபுரம்–21.20, மதுராந்தகம்–12.20, மாமல்லபுரம்–7.40, ஸ்ரீபெரும்புதூர்–7, தாம்பரம்–6.20.

கனமழை காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரி முத்தையா கூறியதாவது:–

காஞ்சீபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 924 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் பருவமழையால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகமாகி உள்ளது. அதனால் பெரிய ஏரிகள் உள்பட 212 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

மேலும் 207 ஏரிகள் 75 சதவீதமும், 259 ஏரிகள் 50 சதவீதமும், 246 ஏரிகள் 50 சதவீதத்துக்கு குறைவாகவும் கொள்ளளவை எட்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாகாண்யம் ஊராட்சியில் சித்தேரி, பெரிய ஏரி, அழகூர்ஏரி ஆகிய 3 ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் 3 ஏரிகளும் தற்போது நிரம்பி வழிகிறது.

இதனால் கால்வாய்களில மழைநீர் பாய்ந்து ஓடுகின்றது. அந்த தண்ணீரில் பொதுமக்கள் குளித்தும், மீன் பிடித்தும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

மாமல்லபுரம் அருகே உள்ள தேவனேரியில் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட புலிக்குகை மற்றும் சிவன் மண்டபம் உள்ளன. தொல்லியல்துறை இந்த புராதன சின்னங்களை பாதுகாத்து பராமரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது புலிக்குகை மற்றும் சிவன் மண்டபத்தில் மழைநீர் புகுந்துள்ளது.

தற்போது இந்த புராதன சின்னங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே இவற்றை சுற்றுலா பயணிகள் தடைஇன்றி கண்டுகளிக்கும் வகையில் தேங்கி நிற்கும் மழை நீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்ற வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் தொடர் மழை காரணமாக மாமல்லபுரத்துக்கு கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து உள்ளது. சுற்றுலா வாகனங்களும் வரவில்லை. பயணிகள் வராததால் போதிய வருவாய் இன்றி வியாபாரிகளும், சுற்றுலா வழிகாட்டிகளும் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்