தி.மு.க. பிரமுகர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலையா? உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் கந்துவட்டி கொடுமையால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2017-11-06 23:15 GMT

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(வயது42). எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது மனைவி துர்கா ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்தவர். இவர்களுக்கு லக்‌ஷணா(12), கவுசிக்(10) என 2 மகள்கள் உள்ளனர்.

ரமேஷ் விவசாயமும், சிறிய ஒப்பந்த வேலைகளும் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் வீடு கட்டி குடி புகுந்தார். இவருக்கு சுமார் ரூ.40 லட்சம் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் சில மாதமாக இவரை நெருக்கியதாகவும், ஒரு சிலர் கடனை திருப்பிக் கொடு, இல்லையென்றால் வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வீசிவிட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்துச் சென்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் சில நாட்களாக மனஉளைச்சலுடன் காணப்பட்ட ரமேஷ் நேற்றுமுன்தினம் காடாநெல்லூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தனது மனைவி மற்றும் மகள்களை விட்டு, விட்டு திருக்கண்டலம் வந்தார். இரவு வீட்டில் தனியாக இருந்த அவர் பூச்சி மருந்து (வி‌ஷம்) குடித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ரமேஷின் தந்தை சுப்பிரமணி(67) நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது கதவை திறக்காததால் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது ரமேஷ் வீட்டில் இறந்து கிடந்தார். கடன் கொடுத்த சிலர் தகவல் அறிந்து ரமேஷின் உடலை அடக்கம் செய்யக்கூடாது, தங்களிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்துவிட்டு உடலை அடக்கம் செய்யுங்கள் என்று ரமேஷின் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எனவே, தனது மகன் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரமேஷ் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்