சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம்

விருத்தாசலம் அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-06 23:00 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே பாலக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை கிராமத்தில் 250–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக விருத்தாசலம் பாலக்கொல்லையில் இருந்து இந்த கிராமத்தின் எல்லை வரை பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சாலையில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து தற்போது மண் சாலையாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த சாலை தற்போது சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை சீரமைக்க கோரி ஒன்றிய நிர்வாகத்திற்கு மனுகொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் உள்ள தண்ணீரில் கலந்து அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து கிராம மக்கள், சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்