மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனுக்கள் குவிந்தன

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் குவிந்தன.;

Update: 2017-11-06 22:45 GMT
விருதுநகர்,

கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமானோர் மனு கொடுத்தனர்.

வெம்பக்கோட்டை யூனியன் எட்டக்காபட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்றும், சாக்கடை வசதி, சிமெண்டு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்றும், மழை நீர் வடிய வடிகால் அமைக்க வேண்டும் என்றும் சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளனர். இதே போன்று சிவகாசி அனுப்பன்குளம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாத நிலையில் உள்ளதால் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரி உள்ளனர்.

பெரியபேராலி கிராம மக்கள் ஆதிதிராவிடர் களுக்கான மயானத்திற்கு பாதை அமைத்து தரும்படியும், புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படியும், 150 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இருந்தும் குடிநீர் வினியோகம் இல்லாததால் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராமத்துக்கு வரும் வழியில் ரெயில்பாதையில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து வரும் நிலையில் அதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி உள்ளனர்.

காரியாபட்டி தாலுகாவில் உள்ள வக்கனாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் குண்டாற்றில் தடுப்பணை கட்டவும், கண்மாயை மராமத்து செய்யவும் நடவடிக்கை கோரி மனு கொடுத்துள்ளனர்.

விருதுநகர் அருகே உள்ள கெப்பிலிங்கப்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமம் வழியாக செல்லும் ரெயில்பாதையில் சுரங்கப்பாதை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என கலெக்டரிடம் கோரினர்.

மேலும் செய்திகள்