வீடு கட்டித்தருவதாக மோசடி; கிறிஸ்தவ சபை முற்றுகை மதபோதகர் தலைமறைவு

தம்மம்பட்டியில் வீடு கட்டித்தருவதாக மதபோதகர் மோசடி செய்ததாக கூறி, கிறிஸ்தவ சபையை முற்றுகையிட்டு கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-11-05 23:08 GMT
தம்மம்பட்டி,

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காந்திநகரில் கிறிஸ்தவ அப்போஸ்தல சுவிசேஷ சபை உள்ளது. இந்த சபையில் மத போதகராக மைக்கேல் என்பவர் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வருகிறார். தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, முள்ளுக்குறிச்சி, கெங்கவல்லி, உப்பிலியாபுரம் உள்பட பல கிராமங்களில் அப்போஸ்தல சுவிசேஷ சபையின் கிளைகள் உள்ளன.
தம்மம்பட்டியில் உள்ள கிளையை நேற்று கிறிஸ்தவர்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முற்றுகையிட்டவர்கள் கூறியதாவது:-

இந்த சபைக்கு வரும் ஏழை, எளிய கிறிஸ்தவ மக்களிடம், வீடு கட்ட வெளிநாட்டில் இருந்து நிதி வந்துள்ளது என்று மதபோதகர் மைக்கேல் கூறினார். ஒரு வீட்டுக்கு ரூ.4 லட்சத்து 27 ஆயிரம் செலவிடப்பட உள்ளது என்றார். அப்போது வீடு கட்ட விண்ணப்பிக்கவும் மற்றும் செலவுக்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகை செலவாகும், என்று கூறினார். இதற்காக ஒவ்வொருவரிடமும் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வசூல் செய்தார். இவ்வாறு 200-க்கும் மேற்பட்டவர்களிடம் வசூலித்தார்.

இரண்டு ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை. கொடுத்த தொகையையும் திருப்பி தரவில்லை. எங்களது பணத்தை வாங்கி மைக்கேல் மோசடி செய்து விட்டார். எனவே கொடுத்த பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது போலீசார், ‘ கெங்கவல்லி பகுதியில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் மதபோதகர் மைக்கேல் மற்றும் அயோத்தியாபட்டணம் பகுதியைச் சேர்ந்த விவேகம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்டான்லி ஆகியோர் மீது சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் செய்தனர். அதன் பேரில் ஸ்டான்லினை போலீசார் கைது செய்தனர். மதபோதகர் மைக்கேல் தலைமறைவாக இருப்பதால் அவரை தேடி வருகிறோம்‘ என்றனர்.
இதையடுத்து முற்றுகையை கைவிட்டு கிறிஸ்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிறிஸ்தவ சபையை முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பாக இருந்தது.

மேலும் செய்திகள்