விசாரணைக்கு ஆஜராக மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீசு
வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர்.
பெங்களூரு,
வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராக மந்திரி டி.கே.சிவக்குமாரின் குடும்பத்தினருக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
கர்நாடக மின்சாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆகஸ்டு மாதம் 2–ந் தேதியில் இருந்து 5–ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதே நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் உறவினர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது முக்கிய சொத்து பத்திரங்கள், ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் அதிகாரிகள் கையில் சிக்கியதாக தகவல் வெளியானது.வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தொடர்பாக மந்திரி டி.கே.சிவக்குமார் ஏற்கனவே 6 முறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அப்போது அவரது சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிகாரிகள் கேட்டு பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர். அதாவது இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணி அளவில் பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசில் தெரிவித்து உள்ளனர்.