அத்தங்கிகாவனூர் ஏரியில் உபரிநீர் வெளியேறும் பகுதியை உடைத்த மர்மநபர்கள்

பெரியபாளையம் அருகே அத்தங்கிகாவனூர் ஏரியில் உபரிநீர் வெளியேறும் பகுதியை மர்மநபர்கள் உடைத்துள்ளனர்.

Update: 2017-11-05 22:25 GMT

பெரியபாளையம்,

வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள அத்தங்கிகாவனூர் ஏரி நிரம்பி வழிந்தது. இந்த நிலையில், ஏரியை ஆக்கிரமிப்பு செய்து சிலர் பயிர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயிர் நீரில் மூழ்கும் நிலை உருவானதாக கூறப்படுகிறது.

இப்படியிருக்க நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் இரவோடு, இரவாக ஏரியின் உபரிநீர் வெளியேறும் பகுதியை உடைத்துள்ளனர். இதனால், ஏரியில் தேங்கியிருந்த மழைநீர் பெருமளவு வீணாக கொசஸ்தலை ஆற்றில் பாய்கிறது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையால் காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. உபரிநீர் வெளியேறும் பகுதியின் கீழ் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வழியாக நீர் வெளியேறி அடையாறு ஆற்று கால்வாயில் கலக்கிறது. உபரிநீர் வெளியேறும் பகுதியில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீன் பிடிக்கின்றனர்.

இதே போல நந்திவரம் பெரிய ஏரி நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது.

இந்த தண்ணீர் மகாலட்சுமி நகர் சாலை வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து ஆதனூர் சாலை வழியாக அடையாறு ஆற்றின் கால்வாயில் கலக்கிறது. இந்த நீர் மண்ணிவாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம், அனகாபுத்தூர், சைதாப்பேட்டை வழியாக சென்று பின்னர் கூவம் ஆறு வழியாக கடலில் கலக்கிறது.

மேலும் செய்திகள்