ரூ.82 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபர் மீட்பு

ரூ.82 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபர் மீட்கப்பட்டார். அவரை கடத்திய 6 பேர் கைதானார்கள்.;

Update: 2017-11-05 21:14 GMT

மும்பை,

மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் பவின் ஷா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால்  அவரது மனைவி மேக்வாடி போலீசில் புகார் கொடுத்தார்.

இந்தநிலையில், மறுநாள் பவின் ஷா மனைவியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதில் பேசிய ஆசாமி, 2 வீடியோக்கள் அனுப்பி வைத்திருப்பதாக கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து அந்த வீடியோக்களை ஆன் செய்து பார்த்தபோது, அதில், பவின் ஷா பேசினார். அந்த வீடியோ பதிவில் தன்னை ரூ.82 லட்சத்திற்காக ஒரு கும்பல் கடத்தி வைத்துள்ளதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அந்த பணத்தை கொடுத்து விடும்படியும் கூறினார்.

இதைப்பார்த்து பதறிப்போன அவரது மனைவி இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து பவின் ஷாவை கடத்திய கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பவின் ஷாவின் மனைவியிடம் பணத்தை கொடுத்து கடத்தல்காரர்களிடம் கொடுக்க அனுப்பி வைத்தனர். அவரிடம் இருந்து பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் வந்து பணத்தை வாங்கியபோது, கடத்தல்காரர்கள் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அங்குள்ள ஒரு கட்டிடத்தில் இருட்டு அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பவின் ஷா அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று அவரை மீட்டனர். மேலும் அங்கிருந்த 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்