சீர்காழி பகுதியில் ஒரு வாரமாக பலத்த மழை: 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின

சீர்காழி பகுதியில் ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.;

Update: 2017-11-05 23:00 GMT
சீர்காழி,

சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சீர்காழி பகுதியில் உள்ள தெற்குராஜன் வாய்க்கால், புதுமண்ணியாறு, பொறைவாய்க்கால், கழுமலையாறு, கோவிந்தகாவிரி, திருநகரி வாய்க்கால், அய்யா வைய்யனாறு உள்ளிட்ட வாய்க்கால்களில் அதிக அளவில் மழைநீர் ஓடியதால் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தொடர்மழையால் வேட்டங்குடி, எடமணல், மாதானம், தாண்டவன்குளம், எடமணல், திருமுல்லைவாசல், கடவாசல், வடகால், திட்டை, தில்லைவிடங்கன், எடகுடிவடபாதி, கரைமேடு, குன்னம், மாதிரவேளூர், பெரம்பூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கற்கோவில், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் பயிரிடப்பட்டு இருந்த 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

தொடர் மழையால் மயிலாடுதுறை சாலை, பூம்புகார் சாலை, சிதம்பரம் சாலை, பட்டவர்த்தி சாலை, பனங்காட்டாங்குடி சாலை, பழையாறு சாலை, திருமுல்லைவாசல் உள்ளிட்ட சாலைகள் கடுமையாக சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல் சீர்காழி நகர் பகுதியில் பழைய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு, காமராஜ்வீதி, ஈசானியத்தெரு, தேர் தெற்கு வீதி, வ.உ.சி.தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. சீர்காழி தாலுகா பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்