மீன்சுருட்டி, பாடாலூரில் பரவலாக மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் படுகாயம்

மீன்சுருட்டி, பாடாலூரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் படுகாயமடைந்தார். மேலும் மின்னல் தாக்கியதில் பசுமாடு ஒன்றும் இறந்தது.

Update: 2017-11-05 22:45 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள குருவாலப்பர் கோவில் கிராமம் தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 75). கூலித்தொழிலாளி. இவர் தனது குடிசை வீட்டில் வழக்கம் போல் நேற்று இரவு தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இரவு சுமார் 1 மணியளவில் வீட்டின் சுவர் இடிந்து வீட்டில் உறங்கி கொண்டு இருந்த நாகப்பன் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த நாகப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் வேல்முருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) காமராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நாகப்பனுக்கு ஆறுதல் கூறினார்கள்.

மின்னல் தாக்கி பசுமாடு சாவு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள பாடாலூர், செட்டி குளம், நக்கசேலம், தேனூர், கொளக்காநத்தம், காரை, இரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று முன் தினம் இரவு முதலே பரவலாக மழை பெய்தது. நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது இரூர் கிராமத்தை சேர்ந்த நடராஜனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்த பசுமாடு மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. 

மேலும் செய்திகள்