களக்காடு பகுதியில் விடிய விடிய கனமழை: 3 தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது

களக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பச்சையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக 2 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒரு பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

Update: 2017-11-05 23:15 GMT
களக்காடு,

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. களக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் விடிய விடிய கொட்டிய கனமழை நேற்று காலை வரை நீடித்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் ரோடுகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

குட்டைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இந்த மழையால் கோவில்பத்து, சீவலப்பேரி பகுதியில் 2 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் களக்காடு பகுதியில் மின்வினியோகம் தடைபட்டது.

மேலும் நகரின் பல இடங்களில் மின்கம்பங்களில் இருந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. களக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் இரவு முழுவதும் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

மழையின் காரணமாக நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு, பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மேல வடகரை- கீழபத்தை ரோட்டில் பச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதேபோல் பத்மநேரி- வடமலைசமுத்திரம் செல்லும் ரோட்டில் பச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

களக்காடு நாடார் புதுத்தெருவை சேர்ந்த கணேஷ் என்பவர் தான் வளர்த்து வந்த பசுமாட்டை, களக்காடு மூணாற்று பிரிவு பகுதியில் கட்டிப் போட்டிருந்தார். அப்போது நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு, பச்சையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மூணாற்று பிரிவு பகுதியில் வந்ததால், பசுமாடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தது.

களக்காடு தலையணையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. களக்காடு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 18 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 15 அடி உயர்ந்தது. களக்காடு பகுதியில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மகிழடி கருப்பசாமி கோவில் பீடம் வெள்ளத்தால் உடைந்தது. அதன் அருகில் இருந்த ஆலமரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மகிழடி- லெவிஞ்சிபுரத்தை இணைக் கும் தரைபாலமும் உடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு பின்னர் நம்பியாற்றில் வெள்ளம் பாய்ந்தோடியதை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்தனர். திருக்குறுங்குடி பெரியகுளத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மாஞ்சோலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அங்கு செல்லக்கூடிய பாதையில் குரங்கன்தட்டு என்ற இடத்தில் சாலையின் நடுவே மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாஞ்சோலைக்கு செல்கின்ற பஸ்கள் சரிவர இயக்கப்படவில்லை. இதேபோல் நாலுமுக்கு பகுதியிலும் மரம் சாய்ந்து விழுந்ததால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. நெல்லை பேட்டை படையாச்சி தெருவை சேர்ந்த வெள்ளையம்மாள் (வயது 90) என்பவருடைய வீடு இடிந்து விழுந்தது. இதனால் அருகே உள்ள வேலு என்பவருடைய வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்தது.

இதேபோல் பணகுடி அருகே உள்ள ரெகுநாதபுரத்தை சேர்ந்த ராஜதுரை என்பவருடைய வீடும் இடிந்து விழுந்தது. மேலும் ராதாபுரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மொத்தம் 26 வீடுகள் மழையால் இடிந்து விழுந்தன. இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்