25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது என அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2017-11-05 22:45 GMT
குடவாசல்,

குடவாசல் ஒன்றியம் ஆலத்தூர், கிள்ளியூர், திருப்பாம்புரம், செருகுடி, அன்னியூர், வடமட்டம், பரவக்கரை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். அப்போது திருப்பாம்புரத்தில் தென்கோரையாற்றில் வெள்ள பெருக்கால் மூழ்கியுள்ள வயல்களை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து பரவக்கரையில் முட்டையாறில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அம்பாள்ஆச்சிபுரத்தில் தண்ணீரால் சூழப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டார். பின்னர் தண்ணீரில் மூழ்கியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்களும், நேரடி நெல் விதைப்பு செய்த வயல்வெளிகளையும் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் முட்டையாற்றில் வயல்களில் உள்ள மழைநீர் வடியும் வகையில் ஆற்றில் உள்ள செடி- கொடிகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆட்சியில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்திட அரசு அதிகாரிகள் முனைப்புடன் செயல்படுகிறார்கள். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் 36,200 எக்டேர் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. மழைநீர் வடியும் வகையில் வடிகால் பகுதிகளை மாவட்ட நிர்வாகம் சீர் செய்து வருகிறது.

முடிக்கொண்டான், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளதால் தாழ்வான பகுதியில் வாழும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரவும் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த மணலகரம் கலியபெருமாள் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நெம்மேலியில் தொகுப்பு வீட்டின் மேற்கூரையின் காரைகள் பெயர்ந்து விழுந்து காயம் அடைந்த சுமிதா, கவுதமன் ஆகிய இருவரும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறி பழங்களை வழங்கினார். முடிக்கொண்டானில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பார்த்து பால், பிரட் ஆகியவற்றை வழங்கினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், கோபால் எம்.பி., உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், நன்னிலம் தாசில்தார் அன்பழகன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ராமகுணசேகரன், அன்பு, ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்