பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கத்தினர் டெல்லி பயணம்

பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கத்தினர் தஞ்சையில் இருந்து ரெயிலில் புறப்பட்டு டெல்லி சென்றனர்.;

Update: 2017-11-05 23:00 GMT
தஞ்சாவூர்,

டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தை அனைத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு வருகிற 9, 10, 11 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த உள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

வங்கி, மின்சாரம், போக்குவரத்து தொலைபேசி, நுகர்பொருள், ரெயில்வே, துறைமுகம், மருந்து உள்ளிட்ட பொதுத்துறையை தனியாருக்கு விற்க கூடாது. அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்காதே என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மத்திய அரசின் மதவாத, ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில் பங்கேற்க தஞ்சை, கும்பகோணம், செங்கிப்பட்டியில் இருந்து 100 பேர் நேற்று சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லி செல்வதற்காக புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்னை சென்று அங்கிருந்து நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றனர். தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம், அரசு போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் தலைமையில் தஞ்சையில் இருந்து 25 பேர் புறப்பட்டு சென்றனர்.

இவர்களை வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், தமிழ்நாடு இளைஞர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்சோரி, மாணவர் சங்க பொதுச்செயலாளர் பிரபாகரன், அரசு போக்குவரத்து அதிகாரிகள் நல சங்க நிர்வாகி சந்திரமோகன், அலுவலக சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்