பாலாற்றின் குறுக்கே ரூ.6½ கோடியில் தடுப்பணை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தகவல்

வெம்பாக்கம் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.6½ கோடியில் தடுப்பணை கட்டப்படுகிறது என்று தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2017-11-05 22:45 GMT
செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மாவட்டமாக திகழ்கிறது. குறிப்பாக செய்யாறு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகபடியான விவசாய நிலங்களும், நெல், கரும்பு, வேர்கடலை உள்ளிட்ட பயிர்களை வைத்து விளைச்சல் மூலமாக கிடைக்கும் வருவாய் நம்பியே விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் விவசாயம் செழிக்க நீர் வளத்தின் ஆதாரமாக திகழ்வது பாலாறு மற்றும் செய்யாறு ஆறுகள் தான். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் செழிக்க பாலாற்றில் தடுப்பணை கட்டி நீரினை சேமித்து வைக்க வேண்டும் என்கிற நீண்ட கால கோரிக்கையை தூசி. கே.மோகன் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனையடுத்து வெம்பாக்கம் தாலுகா வெங்களத்தூர் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ரூ.6½ கோடியில் தடுப்பணை கட்டப்பட உள்ளது.

எம்.எல்.ஏ. ஆய்வு

இந்த நிலையில் நேற்று பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட உள்ள இடத்தினை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாவட்டத்தில் மிக பெரிய ஏரியாக திகழ்வது மாமண்டூர் ஏரி. இந்த ஏரிக்கு நீர்வரத்து கால்வாய்களில் ஒன்றுதான் ராஜா கால்வாய். பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது உபரிநீர்் ராஜா கால்வாய் வழியாக மாமண்டூர் ஏரியை வந்தடைகிறது. ரூ.6½ கோடியில் வெங்களத்தூர் மற்றும் வடஇலுப்பை கிராமத்தின் இடையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுகிறது’ என்றார்.

ஆய்வின்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் டி.பி.துரை, எம்.மகேந்திரன், எஸ்.திருமூலன், ரமேஷ், பூபாலன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்