இரட்டை இலை சின்னத்தை பெற்று விட்டால் அ.தி.மு.க.வை கைப்பற்றியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி

இரட்டை இலை சின்னத்தை பெற்று விட்டால் அ.தி.மு.க.வை கைப்பற்றியது போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தி விடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் என தர்மபுரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டி பேசினார்.

Update: 2017-11-05 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் கட்சியின் 46-ம் ஆண்டு தொடக்க விழா, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமை தாங்கினார்.

தர்மபுரி மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் வரவேற்றார். கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைசெயலாளர் ஆர்.ஆர்.முருகன் முன்னிலை வகித்தார்.

விழாவில் அ.தி.மு.க. (அம்மா அணி) துணைபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த விழாவில் அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று சசிகலாவை அ.தி.மு.க.வின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் வலியுறுத்தினார்கள். ஆனால் முதல்-அமைச்சர் பதவி வேண்டாம் என்று மறுத்த அவர், இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் கட்டிகாக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக பொறுப்பேற்க செய்தார்.

ஆனால் அவர் மதிப்பளிக்கும் வகையில் செயல்படாததால் முதல்-அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் சிறைக்கு செல்லவேண்டிய கடுமையான சூழலில் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு செய்தார்.

இந்த நிலையில் ஒப்பந்தகாரர் சேகர்ரெட்டியின் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது பலகோடி ரூபாய் மற்றும் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது முதல்-அமைச்சரின் உறவினரும் கைது செய்யப்பட்டார்.

வருமானவரித்துறை சோதனை மற்றும் அமலாக்கப்பிரிவின் நடவடிக்கைக்கு பயந்து சசிகலாவிற்கு எதிரான நிலைப்பாட்டை முதல்-அமைச்சர் எடுத்தார். அதன்மூலம் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றி விடலாம் என்ற அவருடைய எண்ணத்தை அறிந்து முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனுஅளித்தனர்.

அப்போதைய கவர்னர் உரிய நேரத்தில் முடிவெடுக்காததால் மக்கள் விரும்பாத ஆட்சி நடக்கும் துரதிர்ஷ்டவசமான சூழல் தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக இந்த ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்படும்.

துரோகம் வென்றதாக சரித்திரமில்லை. தியாகமும், நேர்மையும் தோற்றதாக வரலாறு இல்லை. சசிகலாவை கட்சியை விட்டு நீக்கும் முடிவை எடுத்து துரோக ஆட்சி நடத்துபவர்கள் வருங்காலத்தில் அரசியலிலேயே நீடிக்க முடியாது.

தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சியில் ஏழை,எளிய மக்கள், விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மக்களுக்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு சரியாக நிறைவேற்றவில்லை. ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை பலனடைந்தால் போதும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்கள்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று ஏற்கனவே தெரிந்திருந்தும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகஅரசு எடுக்கவில்லை. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் தற்போது தண்ணீரில் மிதக்கின்றன. தற்போதைய ஆட்சியாளர்கள் ஆறுகள், ஏரிகளை தூர்வாருவதற்கு பதிலாக தமிழகஅரசின் கஜானாவை தூர்வாரி இருப்பது தற்போது தெரியவருகிறது.

தமிழக அமைச்சர்களின் பேச்சு மற்றும் செயல்பாடு பல சமயங்களில் கோமாளித்தனமாக உள்ளது. கோமாளிகள் போல் உள்ள இவர்களின் செயல்பாட்டால் வடிவேலு போன்ற காமெடி நடிகர்களுக்கே இப்போது மார்க்கெட் போய் விட்டது. இதுதொடர்பாக இளைஞர்கள் சமூக ஊடகங்களில் கிண்டலடித்து விமர்சித்தால் அதற்கு நான்தான் மூலகாரணம் என்று புகார் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்தநிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுவிட்டால் அ.தி.மு.க.வை கைப்பற்றிவிட்டதை போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தி விடலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அந்த எண்ணம் நிறைவேறாது. இரட்டை இலை சின்னம் நமக்கே கிடைக்கும். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க. என்ற இயக்கத்தை கட்டி காக்க 1½ கோடி தொண்டர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.

விழாவில் டி.டி.வி.தினகரனுக்கு தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் வீரவாள் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கட்சியின் அவைத்தலைவர் அன்பழகன், பொருளாளர் தஞ்சை ரெங்கசாமி, கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாநில தகவல் தொழில்நுட்பபிரிவு தலைவர் பாலு, மாவட்ட அவைத்தலைவர் டி.முத்துசாமி, மாவட்ட இணைசெயலாளர் சி.சாந்தரூபி, மாவட்ட துணைசெயலாளர்கள் எம்.ஏ.ஏகநாதன், சி.ராணி, மாவட்ட பொருளாளர் டி.ராஜேந்திரன் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகரசெயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்