தமிழகத்தில் வேறு எந்த நடிகராலும் ஆட்சிக்கு வரமுடியாது பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

தமிழகத்தில் வேறு எந்த நடிகராலும் ஆட்சிக்கு வரமுடியாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2017-11-05 23:45 GMT

பண்ருட்டி,

 அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று பண்ருட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் இப்போது நடைபெறுவது அ.தி.மு.க. தொண்டர்களின் ஆட்சியாகும். தேர்தல் ஆணையம் 6–ந் தேதி(இன்று) இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த அ.தி.மு.க.விற்கு வழங்கும். அ.தி.மு.க.வில் எல்லோரும் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஜெயலலிதா மறைவையடுத்து, நாம் அனைவரும் சேர்ந்து சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக நியமித்தோம். எதிர்பாராத விதமாக அவருக்கு உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கியது.

இந்த தண்டனை அவருக்கு கிடைத்ததும், சசிகலா என்ன செய்திருக்க வேண்டும், கட்சி பொறுப்பாளர்களையும், மூத்த தலைவர்களையும் அழைத்து பேசி கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது குறித்து ஆலோசித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாமல் கட்சியிலேயே இல்லாத அவரது அக்காள் மகன் டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராக ஆக்கி உள்ளேன், அனைவரும் அவர் சொல்வதை கேட்டுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டார். இதை எப்படி ஏற்றுக்கொள்வது?, கட்சியை குடும்ப சொத்தாக ஆக்க முயன்றது தவறு. பொதுச்செயலாளர் பொறுப்பில் சசிகலா சரியாக செயல்பட்டு இருந்தால் அ.தி.மு.க.வில் பிரச்சினையே ஏற்பட்டு இருக்காது. தி.மு.க.வில்தான் கட்சி குடும்ப சொத்தாக ஆக்கப்பட்டுள்ளது.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் திராவிடத்தை மக்களிடையே வளர்த்துள்ளனர். தமிழகத்தில் வேறு எந்த நடிகராலும் ஆட்சிக்கு வரமுடியாது. இங்கு தேசிய கட்சிகளால் ஆட்சி பிடிக்க முடியாது. தமிழக மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசுடன் நட்புடன் இருக்க வேண்டும். இது தவறு இல்லை.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தேர்தல் சமயத்தை தவிர மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் புரிதலுடன்தான் இருந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி நன்றாகத்தான் நடைபெற்று வருகிறது. மழைகாலத்தில் கத்தும் தவளைகளை போல் எதிர்க்கட்சிகள் கத்திக்கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய அரசியல் அனுபவத்தால் எனக்கு தெரிந்த ஆலோசனையை கண்டிப்பாக தமிழக அரசுக்கு வழங்குவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்