கடலூர் முதுநகரில் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்; கலெக்டர் உத்தரவு

கடலூர் முதுநகரில் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-11-05 22:15 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் அமைத்து வடிய வைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கடலூர் முதுநகர் பகுதியில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் ஸ்டூவர்ட் கால்வாய், சுத்துக்குளம்– துறைமுகம் ரெயில் நிலையம் அருகில் உள்ள கால்வாய், ஈச்சங்காடு கால்வாய் பகுதிகளை பார்வையிட்டு, மழைநீர் தங்கு தடையின்றி செல்கிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

அப்போது அந்த கால்வாய்களில் ஆகாய தாமரை, குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. மழைநீர் வடிந்து செல்லவும் தடையாக இருந்தது. இதையடுத்து கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் ஆகாய தாமரைகளை அகற்ற அங்கிருந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளில் இருந்து மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக உரிய வழிமுறைகளை கண்டறிந்து உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது கடலூர் சப்–கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், நகராட்சி ஆணையாளர் முஜிபுர்ரகுமான், தாசில்தார் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரத் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்