விவசாயிகளின் அனைத்து கடனையும் ரத்து செய்ய வேண்டும் உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகம் கோரிக்கை
விவசாயிகளின் அனைத்து கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஈரோடு,
அனைத்து இந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் ஜெ.ஜோதிகுமார் தலைமை தாங்கி பேசினார். மாநில இணை பொதுச்செயலாளர்கள் ஜெ.வேணி, குலோத்துங்கன், இளைஞர் அணி செயலாளர் எம்.சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் மக்கள் ஜி.ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞர்அணி செயலாளர் சூரியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும்.
* படித்த இளைஞர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும்.
* கங்கை–காவிரி ஆறுகளின் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
* தற்கொலை செய்து கொண்ட தமிழக விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
* தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
* தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
கூட்டத்தில் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஏ.நல்லசாமி, ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் டி.தண்டாயுதபாணி, மாவட்ட பொருளாளர் ஏ.எஸ்.சாமிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாவரசு, மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாநகர செயலாளர் அம்ஜத்கான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.