அவினாசி அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்–1 மாணவி உள்பட 2 பேர் சாவு, உறவினர்கள் போராட்டம்
அவினாசி அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்–1 மாணவி உள்பட 2 பேர் இறந்தனர். சேவூர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் முழுவதும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் உடல் வலி, மூட்டு வலி, இருமல், சளி மற்றும் லேசான காய்ச்சல் இருக்குபோதே பெரும்பாலானவர்கள் பயந்துபோய் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற செல்கிறார்கள்.
இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்–1 மாணவியும், பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் ஒருவரும் பலியாகி விட்டனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராமியாம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கன். இவருடைய மனைவி சுதா. இவர்களுடைய மகள் தேன்மொழி (வயது 16). இவர் புளியம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் லேசான மர்ம காய்ச்சல் இருந்தது. இதையடுத்து சேவூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிக்கு சிகிச்சை அளிக்குமாறு, டாக்டர்கள் கூறினார்கள். இதையடுத்து மாணவியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி தேன்மொழி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் அவினாசியை அடுத்த பாப்பான்குளம் இந்திராநகரை சேர்ந்தவர் வளர்அரசு. இவருடைய மகன் வினோத் (19). இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு லேசான மர்ம காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றார்.
ஆனாலும் வினோத்துக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக நேற்று இறந்தார். மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்–1 மாணவியும், வாலிபர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் மாணவி தேன்மொழிக்கு சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும், அங்கு போடப்பட்ட ஊசிக்கு பிறகுதான் தேன்மொழிக்கு வலிப்பு வந்ததாகவும், அதுபோல் வாலிபர் வினோத்துக்கும் சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போட்ட ஊசிக்கு பிறகுதான் வலிப்பு ஏற்பட்டதாகவும் கூறி, இருவரின் உறவினர்களும் சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.