சுற்றுச்சூழலை பாதுகாக்க லாங்வுட்சோலை நாற்று பண்ணையில் இருந்து 4 ஆயிரம் மரக்கன்றுகள் வினியோகம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க லாங்வுட்சோலை நாற்று பண்ணையில் இருந்து 4 ஆயிரம் சோலை மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறினார்.;

Update: 2017-11-05 22:15 GMT
கோத்தகிரி,

மாநில அரசு சார்பில் மரம் வளர்ப்பு திட்டம் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வனத்துறையின் நாற்று பண்ணைகளில் (நர்சரிகள்) சோலை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வனத்துறை நாற்று பண்ணைகளில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள், பள்ளி மற்றும் கல்வி நிலைய வளாகங்கள், சாலையோரங்கள், பொது இடங்கள், கிராம ஊராட்சிக்கு சொந்தமான காலி நிலங்கள், தனியார் எஸ்டேட் வளாகங்களில் நட்டு வளர்ப்பதற்காக வழங்கப்படுகின்றன.

மேலும் சோலை மரக்கன்றுகள் மட்டுமே நாற்று பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வினியோகம் செய்யப்படுவதால் வனவளம் மேம்படுவதுடன் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. வனவிலங்குகள் நகர் பகுதிக்கு உணவு தேடி வருவதும் அதனால் மனித, வனவிலங்கு மோதல் ஏற்படுவதும் தவிர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான லாங்வுட் சோலையில் மர நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் வனத்துறை மூலம் 4 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளதுடன் எஞ்சியுள்ள நாற்றுக்கள் வினியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளன என்று கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

மரம் நடும் திட்டத்துக்காக கோத்தகிரி லாங்வுட் சோலை நாற்று பண்ணையில் விக்கி, நாவல், நாய்தேக்கு, கிளிஞ்சி போன்ற மரங்கள் மட்டுமின்றி சாலையோரத்தில் பொதுமக்களை கவரும் வகையில் பூத்து குலுங்கும் போடாகர்பஸ், பாட்டில் பிரஷ், ஜெகரண்டா மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

இது மட்டுமின்றி கோத்தகிரி நகரின் மத்தியில் பல கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், வனவிலங்குகளுக்கு இருப்பிடமாகவும், சுற்றுச்சூழலுக்கு எடுத்துக்காட்டாக லாங்வுட் சோலை விளங்குகிறது. இங்கிருந்து கடந்த 4 மாதங்களில் 4 ஆயிரம் சோலை மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. இங்குள்ள அரிய வகை மரங்களை பாதுகாக்கவும், மேலும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்