ராமேசுவரத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை கலெக்டர் ஆய்வு

ராமேசுவரத்தில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-11-05 22:30 GMT

ராமேசுவரம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு ஊர்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ராமேசுவரம் பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு மற்றும் காலை வேளைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை நேற்று காலை 9 மணி வரை தொடர்ந்து பெய்தது. இதனால் ராமேசுவரம் மார்க்கெட் தெரு உள்ளிட்ட பல பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மார்க்கெட் பகுதியில் அனைத்து கடைகளையும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக கடைக்காரர்களும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

இதேபோல எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையிலும், அதனை ஒட்டியுள்ள வீடுகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. பேய்க்கரும்பு பகுதியில் அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பாக தண்ணீர் தேங்கி நின்றது. இந்த தண்ணீரை வேகமாக அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தங்கச்சிமடம், பாம்பன் பகுதியிலும் தொடர் மழை பெய்து வருகிறது. தங்கச்சிமடம் விக்டோரியா நகரில் சாலைகள், வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகஅளவில் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட ராமேசுவரம் பகுதிகளை நேற்று நேரில் பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆய்வு செய்தார். அப்போது சீதா தீர்த்தம், ராமர் தீர்த்தம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீரை உடனடியாக அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

பின்னர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தார். அப்போது அந்த தொட்டி முழுவதும் தூசி படிந்து சுகாதாரமற்ற நிலையில் இருப்பதைக்கண்ட அவர் உடனடியாக அந்த தொட்டியை நன்றாக சுத்தம் செய்யும்படி அங்கிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் அந்த பகுதியில் ஒரு சில வீடுகளில் தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கடற்கரைக்கு சென்ற அவர் அங்கு கொட்டப்பட்டிருந்த சிப்பிகள், மீன் கழிவுகளை கண்டதும் அதனை அகற்ற உத்தரவிட்டார். மேலும் மீன் கழிவுகளை கடற்கரையில் கொட்டினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அவருடன் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அய்யப்பன், துணை தாசில்தார் அப்துல் ஜப்பார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்