பசுமை பஞ்சாயத்து

‘திருமண விருந்து உபசரிப்புக்கு பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தினால் திருமண சான்றிதழ் வழங்கப்படமாட்டாது’ என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது, கேரளாவில் உள்ள பஞ்சாயத்து நிர்வாகம் ஒன்று.

Update: 2017-11-05 07:04 GMT
‘திருமண விருந்து உபசரிப்புக்கு பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தினால் திருமண சான்றிதழ் வழங்கப்படமாட்டாது’ என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது, கேரளாவில் உள்ள பஞ்சாயத்து நிர்வாகம் ஒன்று. மேலும் பிளாஸ்டிக்கில் தயாரான திருமண வரவேற்பு பேனர்களுக்கும் தடைவிதித்துள்ளது. கண்ணூர் மாவட்டத்திலுள்ள கோலாட் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமப்பகுதிகளில் நடைபெறும் திருமண விழாக்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமண விழாக்களின்போது சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்தும்விதமாக ‘கிரீன் புரோட்டோகால்’ என்ற திட்டத்தை கேரள அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில், பூமியில் படிந்து இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கோலாட் பஞ்சாயத்து நிர்வாகம் தடை செய்துள்ளது. அங்கு நடைபெறும் திருமண விழாக்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதாக இருந்தால் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முன்அனுமதியும் பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்துகிறார்களா? ‘கிரீன் புரோட்டோகால்’ விதிகளை பின்பற்று கிறார்களா? என்பதை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே திருமணம் நடந்ததற்கு அத்தாட்சியாக திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை, அலுமினிய தட்டுகள், உலோக டம்ளர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக அங்குள்ள பள்ளிகளில் பிளாஸ்டிக் பேனாக்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த தடை விதிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் 5 மரக்கன்றுகளை கட்டிடத்தின் அருகில் நடவு செய்ய வேண்டும் என்பதும் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிபடுத்தும் விதமாக கட்டுமான அனுமதி பெறுவதற்கு மரக்கன்றுகள் நடப்பட்ட புகைப்படத்தை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்