இந்தியாவிலே அதிக வயதுள்ள வாக்காளர்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலாக நடத்தப்பட்ட தேர்தலில் ஓட்டு போட்டவர், வரவிருக்கும் தேர்தலுக்கு வாக்களிக்க தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு வயது 100.;

Update: 2017-11-05 06:49 GMT
ந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலாக நடத்தப்பட்ட தேர்தலில் ஓட்டு போட்டவர், வரவிருக்கும் தேர்தலுக்கு வாக்களிக்க தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு வயது 100.

1951-ம் ஆண்டு முதல் தவறாமல் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கும் தன் கடமையை தவறாமல் செய்து வருகிறார். அவருடைய பெயர் ஷாம் சரண் நெகி. இமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள கல்பா என்ற கிராமத்தை சேர்ந்தவரான நெகி, பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சுதந்திரத்திற்குப் பிறகு 1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இமாச்சலபிரதேச மாநிலத்திலுள்ள மண்டி பாராளுமன்ற தொகுதிக்கு 5 மாதங்களுக்கு முன்பாக 1951-ம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அங்கு நிலவிய பனிப்பொழிவுதான் அதற்கு காரணம்.

பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பனி காலத்துக்கு முன்பாக அங்கு நடத்தப்பட்ட தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளில் ஒன்று கல்பா என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நெகி முதல் தடவையாக தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து நடைபெற்று வரும் தேர்தல்களிலும் தவறாது வாக்களித்து வருகிறார். அதன் மூலம் அதிக வயதான வாக்காளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வருகிற 9-ந்தேதி இமாச்சல மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு வாக்களிப்பதற்கு நெகி ஆர்வமாக இருக்கிறார். ஆனால் வயது முதிர்வு காரணமாக அவரால் எழுந்து நடமாட முடியாத சூழ்நிலை. அதனால் அவர் வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இளைஞர்கள் ஒவ்வொருவரும் வாக்குரிமையை தவறாது பயன்படுத்த வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார், நெகி.

இந்திய தேர்தல் ஆணையத்தின் 60-வது ஆண்டு விழா கொண்டாட்டம் 2010-ம் ஆண்டு நடைபெற்றபோது தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சால்வா, கல்பா கிராமத்திற்கு சென்று நெகியை நேரில் சந்தித்து கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்