கனவு அரங்கேறும் நேரம்..

கிராமத்து பெண்கள் தனித்திறமைகளில் தலை சிறந்தவர்களாக இருந்தாலும், தொடர்ந்து சாதிக்கவேண்டும் என்ற லட்சிய கனவுகளைக் கொண்டிருந்தாலும், காலம் அவர் களுக்கு கல்யாண வாய்ப்பை வழங்கினால் கலங்காமல் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

Update: 2017-11-05 06:23 GMT
கிராமத்து பெண்கள் தனித்திறமைகளில் தலை சிறந்தவர்களாக இருந்தாலும், தொடர்ந்து சாதிக்கவேண்டும் என்ற லட்சிய கனவுகளைக் கொண்டிருந்தாலும், காலம் அவர் களுக்கு கல்யாண வாய்ப்பை வழங்கினால் கலங்காமல் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர் களது கனவுகளை எதிர்காலத்தில் அவர்களது குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று அப்போது உறுதி எடுத்துக்கொள்கிறார்கள். வெற்றிகரமாக மணவாழ்க்கையை நடத்தி, குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டு, தான் ஏற்கனவே எடுத்திருந்த உறுதி மொழியை செயல்படுத்தத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கிறார், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள செம்மடைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த சந்திரகாந்தா. அந்த வெற்றிக்கு கதாநாயகியாக இருப்பவர், அவரது மகள் எஸ்.எஸ்.சுஷ்மிதா. 17 வயதான இவர் காலில் சுழலும் சக்கரங்களோடு (ஸ்கேட்டிங்) பந்தை கையால் கடத்திச்சென்று கோல் ஆக்கும் ‘ரோல் பால்’ என்ற விளை யாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்.

சாதனை படைத்த சுஷ்மிதாவிடம் பேசும் முன்பு, சாதனைக்கு காரணமாக இருக்கும் தாயார் சந்திரகாந்தா சுப்பிர மணியமுடன் பேசுவோம்!

“விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் படிப்பிலும், விளையாட்டிலும் ரொம்ப ஆர்வமாக ஈடுபட்டேன். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அப்போது என்.சி.சி.யில் இணைந்து செயல்பட்டேன். துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு பரிசும் பெற்றிருக்கிறேன். பள்ளிக்கூட கைப்பந்து அணியில் இடம் பெற்று மாவட்ட அளவில் வெற்றி பெற்றிருக்கிறேன். பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. விளையாடுவதற்கான வாய்ப்பும் உரு வாகவில்லை. விவசாய குடும்பம் என்பதால் காடு, தோட்டம், மாடுகள் என்று வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

அந்த காலகட்டத்தில்தான் இவர் (கணவர் சுப்பிரமணியம்) என்னை பெண் பார்க்க வந்தார். எங்களுக்கு வரதட்சணை கொடுக்கும் அளவுக்கு வசதியிருந்தாலும், இவர் வரதட்சணை வேண்டாம் என்பதில் ரொம்ப உறுதியாக இருந்தார். அதனால் இவரை எனக்கும், என் பெற்றோருக்கும் பிடித்தது.

திருமணம் முடிந்து வாழ்க்கையை தொடங்கினோம். முதல் குழந்தை மதுநிதா பிறந்தாள். இரண்டாவதாக நான் கர்ப்பம்தரித்தபோது ஜோதிடம் பார்க்கச் சென்றோம். ஜோதிடர், ‘இரண்டாவதும் பெண் குழந்தைதான்’ என்றார். உடனே உறவினர்களில் சிலர், ‘இரண்டாவதும் பெண் என்றால் வேண்டாமே!’ என்பதுபோல் பேசினார்கள். அந்த வார்த்தைதான் எனக்கு பழைய கனவைப் புதுப்பித்தது. ‘இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்து அவளை சாதனையாளராக்கிக் காட்டுவேன்’ என்று உறுதி எடுத்துக்கொண்டேன். உறுதியோடு சுஷ்மிதாவை பெற்றெடுத்தேன். என் கணவர் குழந்தைகளின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். குழந்தைகளை எனது விருப்பம்போல் வளர்க்க அவர் சுதந்திரம் தந்தார்.

என் மகள்களிடம் நான் தோழி போல் பழகுவேன். அவர்களுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வத்தை நான் கணித்து மேம்படுத்த விரும்பினேன். அப்போதுதான் சுஷ்மிதாவுக்கு ‘ஸ்கேட்டிங்’ செய்வதில் அதிக அக்கறை இருப்பதை உணர்ந்தேன். அவள் ஆர்வத்தை பரிசோதிப்பதற்காக ஒருநாள் நள்ளிரவு 1 மணிக்கு எழுப்பி, ‘வா நேரமாச்சு.. ஸ்கேட்டிங் பயிற்சிக்கு போகலாம்’ என்றேன். அவளும் எந்த சோம்பலையும் வெளிக்காட்டாமல், எத்தனை மணி என்றும் கேட்காமல் கிளம்பத் தயாரானாள். அந்த நிமிடமே அவளுக்காக என்னை நான் மாற்றிக்கொள்ள தயாரானேன்.

அவளுக்காகவே நான் ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொண்டேன். அவள் வீட்டில் இருந்தே ரோலர் ஸ்கேட்டிங்கை கட்டிக்கொண்டு ரோட்டில் செல்வாள். நான் ஸ்கூட்டரில் அவள் பின்னால் செல்வேன். அதிகாலையில் இருந்து இந்த பயிற்சியை மேற்கொள்வாள். பயிற்சியாளர் ராஜசேகரும் சிறப்பாக வழிகாட்டினார். அவள் பெற்ற கடுமையான பயிற்சிகளால் சர்வதேச அளவில் சாதித் திருக்கிறாள். அவளது வளர்ச்சிக்காக நானும், என் கணவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

எங்கள் மகள் இருவருமே இப்போது வெவ்வேறு மாநிலங்களில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழும் அளவுக்கு அவர்களை நாங்கள் வளர்த்திருக்கிறோம். பொதுவாக பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் அந்த குழந்தைகள் வயதுக்கு வரும் வரைதான் அனைத்து சுதந்திரத்தையும் கொடுக் கிறார்கள். அதற்கு பின்பு விளையாட்டும் கிடையாது. சுதந்திரமும் கிடையாது என்ற நிலை உருவாகிவிடுகிறது. இந்த நெருக்கடி கிராமங்களில்தான் அதிகம். அந்த நிலை மாறவேண்டும். பெண்பிள்ளைகளை அவர்கள் விரும்பும் வரை விளையாட அனுமதிக்கவேண்டும். அது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்”என்றார்.

இறக்கை முளைத்த பட்டாம்பூச்சியாக காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ரோல் பால் களத்தில் சூறாவளியாக சுழலும் சுஷ்மிதா, சமீபத்தில் நடந்த 4-வது உலக கோப்பை ரோல்பால் போட்டியில் ஈரான் அணியை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணியின் வெற்றி நாயகி. ரோல் பால் விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்காகவே, புனேயில் தங்கி, 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மராட்டிய மாநிலத்தில் படித்தாலும், தமிழக அணிக்காகவே விளையாடுகிறார்.

சுஷ்மிதா சொல்கிறார்:

“எனக்கு மூன்று வயதாக இருந்தபோதே அம்மா என்னிடம் ‘உனக்கு எந்த விளையாட்டு பிடிக்கும்?’ என்று கேட்டார். அப்போது சில சிறுமிகள் ஸ்கேட்டிங் செய்வதை பார்த்துவிட்டு, ‘ஸ்கேட்டிங்’ பிடிக்கும் என்றேன். உடனே பெற்றோர் அனுமதித்தார்கள். நானும், என் அக்காள் மதுநிதாவும் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு சென்றோம். நன்றாக அதில் தேர்ச்சி பெற்றோம். அப்போது அக்கா வெளியூர் சென்று விடுதியில் தங்கிப்படிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் நான் தனியாக செல்லவேண்டியதானது. அப்பா தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வதால் என்னால் சரியாக பயிற்சிக்கு செல்லமுடியவில்லை. அந்த நேரத்தில் எனக்கு கை கொடுத்தது அம்மாதான். என்னை அழைத்துச்செல்வதற்காகவே ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொண்டார். அவர் கொடுத்த ஊக்கத்தால் ‘ஸ்பீடு’ பயிற்சியும் பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, கோப்பைகள் வென்றேன்.

2012-ம் ஆண்டு அப்பா என்னிடம், ‘ரோல் பால் என்ற விளையாட்டு இருக் கிறது. ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றவர்கள் அதில் சிறப்பாக விளையாட முடியும்’ என்று கூறினார். அப்போது ஈரோட்டில் ரோல் பால் பயிற்சியாளர்களோ, பயிற்சி மையமோ, மைதானமோ கிடையாது. அந்த விளையாட்டைப்பற்றியும் யாருக்கும் தெரியவில்லை. புனேயில் நடந்த ரோல் பால் விளையாட்டு வீடியோக்களை அப்பா எனக்கும் அக்காவுக்கும் போட்டு காண்பித்தார். அதை பார்த்து நானும், விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும் அக்காவும் பயிற்சி பெற்றோம்.

அதன் பிறகு நாங்களே சிறுவர்- சிறுமியர்களுக்கு அந்த விளையாட்டு பற்றி பயிற்சி கொடுத்தோம். அதை தொடர்ந்து ஆண்களும் பெண்களும் சேர்ந்த ஒரு அணியை ஈரோட்டில் உருவாக்கினோம். நான் முதன் முதலில் ஆண்களும், பெண்களும் கலந்த போட்டியில்தான் விளையாடினேன். இப்போது தமிழக அணி மற்றும் இந்திய அணியில் வீராங்கனையாக இருக்கிறேன். தாய்லாந்தில் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் ரோல் பால் சேர்க்கப்பட்டது. அந்த முதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றோம். இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது. பின்னர் உலககோப்பை போட்டிகளில் கலந்து கொண்டேன். தற்போதைய போட்டியில் உலக கோப்பையை வென்றதற்காக மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, விஜய்கோயல், ஜவடேகர் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டினார்கள். தற்போது இந்தியா முழுவதும் ரோல்பால் விளையாட்டு பிர பலம் அடைந்து வருகிறது. விரைவில் காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் ரோல்பால் விளையாட்டை சேர்க்கும் வாய்ப்பும் ஏற் படும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார், சுஷ்மிதா.

ரோல் பால் விளையாட்டு பற்றி சுஷ்மிதாவின் தந்தை எம்.பி.சுப்பிரமணியம் கூறுகிறார். இவர் தமிழ்நாடு ரோல்பால் சங்கத்தின் தலைவர்.

“இது இந்தியாவில் தோன்றிய விளையாட்டு. ரோலர் ஸ்கேட்டிங், எறிபந்து, கூடைபந்து, கைப்பந்து ஆகிய 4 விளையாட்டுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான பந்துகள் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன. இந்த போட்டியை வடிவமைத்தவர், புனேவை சேர்ந்த ராஜூ தபாடே. 2003-ம் ஆண்டு அவர் அதிரடியான இந்த விளையாட்டை உருவாக்கினார். ரோலர் ஸ்கேட்டிங் ஸ்பீடு பயிற்சி பெற்றவர்கள் இதில் சாதிக்கலாம். ஒரு அணியில் 6 பேர் விளையாடுவார்கள். கூடுதலாக 6 பேர் அணியில் இடம் பிடித்து காத்திருப்பார்கள். ஆடுகளம் சாதாரண கூடைபந்து மைதானத்தின் அளவில் இருக்கும். சர்வதேச விளையாட்டுகளுக்கு 48 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம் கொண்ட மைதானங்கள் அமைக்கப்படுகிறது. கான்கிரீட், மரம், ரப்ப ரில் இதற்கான தளம் அமைக் கிறார்கள்.

ஒருவர் கோல் கீப்பராக செயல்படுவார். 3 பேர் பந்தை வேகமாக கொண்டு செல்வார்கள். 2 பேர் தடுப்பாட்டக்காரர்களாக செயல்படுவார்கள். 3 வினாடிகளுக்கு மேல் பந்தை கையில் வைக்காமல் மின்னல் வேகத்தில் கடத்திச்செல்லவேண்டும். இது ஒரு மணி நேர விளையாட்டு. முதல் பாதி 25 நிமிடங்கள், 2-வது பாதி 25 நிமிடங்கள். 10 நிமிடங்கள் இடைவேளை. கோல் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

புனேயில் தொடங்கிய விளையாட்டு இன்று இந்தியாவின் 22 மாநிலங்களில் விளையாடப்படுகிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான், ஈரான், கென்யா, உகாண்டா, இலங்கை உள்பட 56 நாடுகளில் ஆர்வமாக விளையாடுகிறார்கள். தமிழ்நாட்டிலும் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ரோல் பாலுக்கு என்று தனியாக ஒரு மைதானம் அமைத்துத்தர அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டந்தோறும் பயிற்சியாளர்களும் நியமிக்கவேண்டும். உலக கோப்பை ரோல் பால் போட்டியில் வெற்றி பெற்ற அணியின் சத்தீஸ்கார் மாநில வீரர்களுக்கு அந்த மாநில அரசு தலா ரூ.3 லட்சம் வழங்கி உள்ளது. ராஜஸ்தான் அரசு ரூ.2 லட்சமும், கேரள அரசு ரூ.3 லட்சமும் வழங்கி உள்ளது. தமிழக அரசும் விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அரசு ஊக்கம் கொடுத்தால் இந்த விளையாட்டில் மேலும் பல சாதனைகள் நிகழும்” என்றார், அவர்.

எம்.பி.சுப்பிரமணியம்-சந்திரகாந்தா தம்பதிகள் ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியில் வசிக் கிறார்கள். இவர்களது மூத்த மகள் மதுநிதாவும் தேசிய ரோல் பால் வீராங்கனைதான். இவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பி.ஏ. படிப்ப தோடு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் தயா ராகிக்கொண்டிருக்கிறார். 

மேலும் செய்திகள்