காங்கிரஸ்–பா.ஜனதா கட்சிகளுக்கு விவசாயிகள் பற்றி அக்கறை இல்லை

காங்கிரஸ்–பா.ஜனதா கட்சிகளுக்கு விவசாயிகள் பற்றி அக்கறை இல்லை என்று தேவேகவுடா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2017-11-05 00:09 GMT

பெங்களூரு,

பெங்களூரு சேஷாத்திரிபுரம் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில தலைவர் குமாரசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது அடுத்த ஆண்டு (2018) நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து செயற்குழு கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அப்போது சமீபத்தில் பெய்த மழையால் பல்லாரி, தாவணகெரே உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த மக்காச்சோளம் நாசமடைந்து இருந்ததை கண்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மழையின் காரணமாக மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளனர். அந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதல்–மந்திரி சித்தராமையாவுக்கும் கடிதம் எழுதி இருந்தேன்.

ஆனால் பிரதமரிடம் இருந்தோ, சித்தராமையாவிடம் இருந்தோ எந்த ஒரு பதிலும் வரவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் சித்தராமையாவுக்கு சிறிதும் இல்லை. விவசாயிகள் பற்றி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கோ, மாநிலத்தில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசுக்கோ அக்கறையோ, கவலையோ இல்லை. தேசிய கட்சிகளால் விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. குமாரசாமியை முதல்–மந்திரியாக்கி அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. அவர் முதல்–மந்திரியாக ஆகி விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். இந்த வயதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகள் பிரச்சினைகளை அறிந்து, அதனை தீர்க்க முடிந்தவரை போராடி வருகிறேன். வரும் சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்