சுரங்க முறைகேடு குறித்து மறுவிசாரணை நடத்த அரசு ஆலோசனை
ஆதாரங்கள் இல்லை என்று சி.பி.ஐ. கூறுவதால் சுரங்க முறைகேடு குறித்து மறுவிசாரணை நடத்த அரசு ஆலோசனை நடத்தி வருவதாக முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
மங்களூரு,
மங்களூரு நேரு மைதானத்தில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்–மந்திரி சித்தராமையா நேற்று காலை விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். மங்களூரு விமான நிலையத்தில் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–பல்லாரியில் நடந்த சுரங்க முறைகேட்டில் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், தொடர்புடைய முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. தற்போது ஜனார்த்தன ரெட்டி மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று சி.பி.ஐ. கூறுகிறது.
இந்த சுரங்க முறைகேடு குறித்து மறுவிசாரணை நடத்த மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசின் சிறப்பு விசாரணை குழுவிடம் ஆலோசனை நடத்தப்படும். அதன்பிறகு சுரங்க முறைகேட்டில் மறுவிசாரணை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.