சேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2 சிறுவர்கள் பலி சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

டெங்கு காய்ச்சலுக்கு 2 சிறுவர்கள் பலி பொதுமக்கள் திடீரென மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2017-11-05 00:15 GMT
சேலம்,

சேலம் தாதகாப்பட்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் மதன் (வயது 12). கருங்கல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 31-ந் தேதி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவனை பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஆஸ்பத்திரியில் மதனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் மதன் திடீரென உயிரிழந்தான். இதுபற்றி அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மதனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர், சிறுவனின் உடல் இந்திராநகரில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையில், டெங்கு காய்ச்சலால் இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும், தாதகாப்பட்டி இந்திராநகர் பகுதியில் சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை 4 மணியளவில் சேலம்-திருச்சி ரோட்டில் பிரபாத் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது, அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி தகவலறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மறியலுக்கு முயற்சி செய்தவர்களை சமாதானப்படுத்தினர். மேலும், இந்திராநகரில் சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்தி, மருத்துவ முகாம் நடத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்து சொல்வதாகவும் போலீசார் உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலுக்கு முயன்ற பொதுமக்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே புதூர்பட்டியை சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளி. இவரது மகன் ரமேஷ் (8). கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கியிருந்து 3-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக சிறுவன் ரமேசுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து சிறுவனுக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதனால் அவனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவன் ரமேசை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பிறகு ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சிறுவன் இறந்தான். பின்னர், சிறுவனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான முசிறிக்கு எடுத்து சென்றனர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் சாவு இல்லாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சலுக்கு உயிர்பலி ஏற்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்