ஏற்காட்டில் மினிபஸ்கள் இயக்க நடவடிக்கை கலெக்டர் ரோகிணி தகவல்

சிரமங்களை குறைக்கும் வகையில் மினிபஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

Update: 2017-11-04 23:52 GMT
ஏற்காடு,

ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி வசம்பாடி கிராமத்தில் ரூ.8 லட்சத்தில் புதிதாக ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

வசம்பாடி கிராமமக்களின் கோரிக்கையினை ஏற்று தற்பொழுது புதிதாக ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவு ரேஷன் கடையின் மூலம் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 217 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறவுள்ளனர். ஏற்காட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

இந்த பகுதி மக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து சிரமங் களை குறைக்கும் வகையில் மினிபஸ்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் ரோகிணி பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஏற்காடு எம்.எல்.ஏ. சித்ரா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி, சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்மை இயக்குனர் செல்வகுமரன், சேலம் சரக துணைப்பதிவாளர் ரத்தினவேலு, பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்