கும்பகோணம் டிராவல்ஸ் அதிபர் கழுத்து நெரித்து கொலை; கார் கடத்தல்

கடலூர் அருகே கும்பகோணம் டிராவல்ஸ் அதிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது காரும் கடத்தப்பட்டது. இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-11-04 23:00 GMT
தஞ்சை,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சீனிவாசநல்லூர் பொன்நகரை சேர்ந்தவர் நயினா செந்தில் என்கிற செந்தில்குமார்(வயது 50). இவர் அ.தி.மு.க. ஊராட்சி கழக செயலாளராக இருந்தார். இவருடைய மனைவி சந்திரா(48). இவர் சாக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க. மகளிரணி தலைவியாக உள்ளார். இவர்களுடைய மகன்கள் தினேஷ்(38), கணேஷ்(33).

செந்தில்குமார், தனது மகன்களுடன் கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மாலை 6 மணி அளவில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், செந்தில்குமாரிடம் வந்து கடலூர் மாவட்டம் வடலூருக்கு சவாரி செல்ல வேண்டும் என்று கூறினர். அதற்கான வாடகையாக குறிப்பிட்ட தொகை தருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதற்கு செந்தில்குமார் சம்மதித்து, தனது காரில் 2 பேரையும் ஏற்றிக்கொண்டு வடலூர் நோக்கி புறப்பட்டார்.

செல்லும் வழியில் செந்தில்குமார், தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, வடலூர் வரை 2 பேருடன் சவாரி சென்று வருவதாக கூறியுள்ளார். ஆனால் அன்று இரவு வெகுநேரம் ஆகியும் செந்தில்குமார் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரா, தனது கணவரின் செல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து மறுநாள் காலையில் சந்திரா, தனது மகன்களுடன் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், சவாரி ஏற்றிக்கொண்டு வடலூர் வரை சென்ற தனது கணவரை காணவில்லை என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

செந்தில்குமாரின் செல்போன் நம்பரை வைத்து, கடைசியாக எந்த இடத்தில் வைத்து செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்தனர். அப்போது அவரது செல்போன், கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் இடைப்பட்ட பகுதியில் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கும்ப கோணம் மேற்கு போலீசார், வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் போலீசாரின் உதவியுடன் அந்த பகுதியில் முகாமிட்டு செந்தில்குமாரின் புகைப்படத்தை வைத்து தேடிப்பார்த்தனர். போலீசாருடன், தினேஷ், கணேஷ் ஆகிய 2 பேரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் விருத்தாசலம்- சேலம் சாலையில் சிறுபாக்கத்தை அடுத்த அரசங்குடி காப்புக்காட்டில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, சிறுபாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இறந்து கிடப்பது செந்தில்குமாராக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், தினேஷ், கணேஷ் ஆகியோருடன் காப்புக்காட்டிற்கு வந்தனர். அங்கு இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்ட 2 பேரும், எங்கள் தந்தைதான் என்று அடையாளம் காட்டினர். இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ஆகியோர் விரைந்து வந்து, செந்தில்குமாரின் உடலை பார்வையிட்டனர். ஆனால் அந்த பகுதியில் அவரது கார் இல்லை.

சவாரி செல்வது போல் நடித்து, செந்தில்குமாரின் காரில் வந்திருப்பதும், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, செந்தில்குமாரின் உடலை காப்புக்காட்டில் வீசிவிட்டு, காரை கடத்திச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையில் செந்தில்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை நடந்தது சிறுபாக்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கொலை செய்து விட்டு காரை கடத்திச்சென்ற 2 வாலிபர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்