திருமருகல், வேதாரண்யத்தில் பலத்த மழை: 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

திருமருகல், வேதாரண்யத்தில் பெய்த கனமழையால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.;

Update:2017-11-05 04:30 IST
திட்டச்சேரி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 27-ந்தேதி தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த 6 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருமருகல் ஒன்றியம் இரவாஞ்சேரி, நரிமணம், வாழ்குடி, விற்குடி, மருங்கூர், திட்டச்சேரி, அகரகொந்தகை, கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. மேலும் மழை காரணமாக கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர்ந்து வேதாரண்யம் நகராட்சி பகுதியில் ஆணையர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்