கொட்டும் மழையில் தஞ்சை- திருச்சி இரட்டை ரெயில்பாதை பணிகளை அதிகாரிகள் ஆய்வு

கொட்டும் மழையில் தஞ்சை- திருச்சி இடையே நடைபெறும் இரட்டை ரெயில்பாதை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2017-11-04 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை- திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்கு ரூ.450 கோடி செலவு ஆகும் என திட்டமிடப்பட்டு கடந்த 2011-12-ம் ஆண்டு முதல்கட்டமாக ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. தஞ்சை- திருச்சி இடையேயான தூரம் 49 கிலோ மீட்டர் ஆகும்.

இந்த வழிதடத்தில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக ஆலக்குடி, பூதலூர், சோளகம்பட்டி, திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் திருச்சியில் இருந்து சோளகம்பட்டி வரை பணிகள் நிறைவு பெற்று தற்போது அந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிகாரிகள் ஆய்வு

சோளகம்பட்டியில் இருந்து தஞ்சை வரையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடித்து விரைவில் போக்குவரத்து தொடங்கும் வகையில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று ரெயில்வே விகாஸ்நிகாம் லிமிடெட்டின் தலைமை செயல் இயக்குனர் பிரதீப்கவுர், திருச்சி கோட்ட ரெயில்வே உதவி பொது மேலாளர் சங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று மழை பெய்து கொண்டே இருந்ததால் அவர்களால் டிராலியில் சென்று ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

ரெயில் சக்கரம் பொருத்தப்பட்ட லாரி

இதையடுத்து அதிகாரிகள் கொட்டும் மழையில் ரெயில்சக்கரம் பொருத்தப்பட்ட லாரி மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை சிவாஜி நகரில் இருந்து சோளகம்பட்டி வரை சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு சில கிலோ மீட்டர் தூரம் டிராலியில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது ரெயில்வே அதிகாரிகளும் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்