போத்தாபுரத்தில் பழங்கால கற்பலகை கண்டுபிடிப்பு

போத்தாபுரத்தில் பழங்கால கற்பலகை கண்டுபிடிப்பு

Update: 2017-11-04 22:30 GMT
கிருஷ்ணகிரி,

தென்னந்திய வரலாற்றில் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் முளுவாய் என்பது கர்நாடகத்தில் முளுபாகல் என்னும் இடத்தை தலைநகராக கொண்டு கோலார், சித்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த பகுதியின் வரலாற்றை அறிந்து கொள்ள கல்வெட்டுகள் பெரும் உதவியாக உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தபுரம் கிராமத்தில் பெரிய கற்பலகை உள்ளதாக, அக்கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர், கிருஷ்ணகிரி அருங்காட்சியக அலுவலகத்தில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காப்பாட்சியர் கோவிந்தராஜ், ஆசிரியர் பயிற்றுனர் சுரேஷ், அகத்தியன் மற்றும் பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் கல்வெட்டை ஆய்வு செய்தனர். ஆய்வில் அக்கல்வெட்டு விஜயநகர கால கல்வெட்டு என்பதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து காப்பாட்சியர் கூறியதாவது:- இந்த கல்வெட்டு கி.பி.1406 முதல் கி.பி.1422 வரை ஆட்சி செய்த விஜயநகர மன்னன் முதலாம் தேவராயனின் ஆட்சிக்காலத்தில் கி.பி.1407-ம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பிரமதேய நிலத்தையும், அதன் எல்லைகளையும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலப்பரப்பானது பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 2 பாகங்கள் கோவிலுக்கும், 16 பாகம் பல்வேறு கோத்ரங்களை சேர்ந்த பிரமணர்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டு மூலம் காடைய நாயக்கர், வரதய நாயக்கர், ஒருபரி நாயக்கர், இம்மடி நாயக்கர் ஆகியோரின் வரலாறு தெரிய வந்துள்ளது என்றார்.

மேலும் செய்திகள்