பென்னாகரம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாமி சிலை கண்டுபிடிப்பு

பென்னாகரம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான வீரபத்திரன் சாமி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;

Update: 2017-11-04 22:45 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடாரம்பட்டியில் பழமையான வீரபத்திரன் சாமி கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் ஆகும். இந்த கோவில் வளாகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை தூய்மைபடுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது.

அப்போது அங்கு பழமையான வீரபத்திரன் சாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக கோவில் பூசாரி மாதையன், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், தாசில்தார் சேதுலிங்கம் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.

பழமையான சிலை

பின்னர் அவர்கள் சிலையை மீட்டு பென்னாகரம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- வீரபத்திரன் சாமி கோவிலில் தூய்மை பணியின் போது சாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலையாக இருக்கலாம். இந்த சிலை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.

பென்னாகரம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான வீரபத்திரன் சாமி சிலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்