தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அளவை குறைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அளவை குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2017-11-04 22:45 GMT
கிருஷ்ணராயபுரம்,

மாயனூர் காவிரியிலிருந்து தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டுவாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிந்து சென்று பாசன வசதி அடைகிறது. பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து செல்வதை அடுத்து நெல், வாழை பயிரிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதை அடுத்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 3 ஆயிரத்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 840 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அவற்றை காவிரியில் ஆயிரத்து 400 கனஅடியும், தென்கரை வாய்க்காலில் 640 கன அடியும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 400 கனஅடியும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 400 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.

வடிய வழியில்லை

தென்கரை வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் தென்கரை வாய்க்கால் கரையோரம் உள்ள வயல், வெற்றிலை கொடிக்கால் மற்றும் வாழை தோட்டங்களில் அதிகளவு தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தென்கரை வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைத்தால் தான் வயல்களிலிருந்து தண்ணீர் வடிய தொடங்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே தென்கரை வாய்க்காலில் குறைந்த அளவு தண்ணீரை திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்