பெண் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை; 4 பேர் கைது

காங்கேயத்தில் பெண் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையடித்த கும்பலை பொதுமக்கள் விரட்டிப்பிடித்ததில் 4 பேர் சிக்கினர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

Update: 2017-11-04 23:00 GMT

காங்கேயம்,

காங்கேயம் தாராபுரம் ரோட்டில் உள்ள சக்திநகரை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 60). வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் அருணாதேவி காங்கேயத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் செந்தில்நாதன். நேற்று காலை ஆறுச்சாமி மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் அருணாதேவி வீட்டை பூட்டி விட்டு, தனது கணவருடன் காங்கேயத்தில் உள்ள கடைவீதிக்கு சென்றுவிட்டார். அங்கு பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் அவர்கள் இருவரும் காலை 10.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன. வீட்டுக்குள் இருந்து ஏதே உருட்டும் சத்தம் வந்து கொண்டிருந்தது.

மேலும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுகிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், உடனே காங்கேயம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதேநேரம் வீட்டின் உள்ளே இருந்து கடப்பாரை மற்றும் கத்தியுடன் வெளியே வந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல், தாங்கள் வந்த காரில் ஏறி தப்ப முயன்றனர்.

இதை பார்த்த தம்பதியினர் ‘திருடன், திருடன்‘ என்று சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள், கொள்ளையர்களின் காரை சுற்றி வளைத்தனர். மேலும் அந்த வழியாக வந்த ஒரு லாரியையும் காரின் குறுக்கே போடும்படி சத்தம்போட்டு கூறினர். லாரி டிரைவர் காரை மறிப்பதற்குள் கொள்ளையர்கள், காரை வேகமாக ஓட்டிச்சென்று லாரியின் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பி சென்றுவிட்டனர்.

இதனால் பொதுமக்கள் அந்த காரை தொடர்ந்து விரட்டி சென்றனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும் கொள்ளையர்களின் காரை விரட்டி சென்றனர். அப்போது, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கொள்ளையர்கள் சென்ற கார் பழுதாகி நடுவழியில் நின்றது. உடனே போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். இதனால் காரில் இருந்த 5 கொள்ளையர்களும் தப்பி ஓட முயன்றனர்.

அதில் ஒருவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மற்ற 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் பொதுமக்களும் போலீசாரும் அவர்களை விடாமல் துரத்தி சென்றனர். அப்போது, கொள்ளை கும்பலை சேர்ந்த மற்றொருவன் காங்கேயம் அகிலாண்டபுரத்தில் உள்ள மின்மோட்டார் அறைக்குள் சென்று பதுங்கினான். இதை கவனித்த பொதுமக்கள் அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

மதியம் 2 மணி அளவில் பள்ளவராயன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் ஒருவன் பதுங்கி இருந்தான். இதுபற்றி அறிந்த பொதுமக்கள் அவனை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் 4 மணி அளவில் பொன்னாளிபாளையம் பகுதியில் மற்றொருவன் சிக்கினான். பிடிபட்ட 4 பேருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து 4 கொள்ளையர்களும் காங்கேயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், 4 பேரிடமும் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி மேற்பார்வையில் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் பூமிபாலகன் மற்றும் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கொள்ளையடிக்க வந்து பிடிபட்டவர்கள், ராஜபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து(25), ராகுல்பாண்டி(27), திருப்பூரை சேர்ந்த குமார்(29), சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியை சேர்ந்த தீனதயாளன்(27) என்பதும், தப்பி ஓடியது மாரியப்பன் என்பதும் தெரியவந்தது.

அத்துடன் மேலும் வக்கீலான ராகுல்பாண்டி தனது காரை கொள்ளைக்கு பயன்படுத்தியுள்ளார். தீனதயாளன் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 13 வழக்குகள் உள்ளன. இவர்கள் 5 பேரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக வீ.புதூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஜாமீனில் வந்த 3 நாட்களிலேயே மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து வக்கீல் அருணாதேவி கொடுத்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து, ராகுல்பாண்டி, குமார், தீனதயாளன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, வக்கீல் அருணாதேவி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு பவுன் மோதிரம், ஒரு வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை மீட்டனர்.

மேலும் கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய மாரியப்பனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள். சினிமா சம்பவம் போல் காங்கேயம் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கேயம் சக்திநகரில் வக்கீல் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவர்களில் 4 பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதில் காயம் அடைந்த கொள்ளையர்களை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சக்திநகரில் நேற்று மாலை சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களை சமரசம் செய்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்