குடும்ப பிரச்சினை காரணமாக திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு
குடும்ப பிரச்சினை காரணமாக திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூரை அடுத்த அருள்புரத்தை சேர்ந்தவர் ஜெயா(வயது 35). இவர் நேற்று காலை 8 மணி அளவில் திருப்பூர் குமரன் ரோடு சப்–கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜெயாவிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், செந்தில்குமார் என்பவருடன் ஜெயா குடும்பம் நடத்தி வந்துள்ளார். செந்தில்குமார் ஏற்கனவே திருமணமானவர். செந்தில்குமார், ஜெயாவை அடித்து சித்ரவதை செய்ததுடன் அவரிடம் இருந்து நகையையும் வாங்கி செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயா திருப்பூர் மாவட்ட கலெக்டர், பல்லடம் போலீசார் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயாவிடம் செந்தில்குமார் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில்குமாரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு ஜெயா திருப்பூர் வந்து கோர்ட்டு வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து ஜெயா தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இதனால் சுமார் ½ மணி நேரம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஜெயாவை போலீசார் பல்லடத்துக்கு அழைத்துச்சென்றனர். பல்லடம் மகளிர் போலீசார் இதுதொடர்பாக ஜெயா, செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.