திட்டக்குடியில் கண்டக்டர் வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை–பணம் கொள்ளை

திட்டக்குடியில் கண்டக்டர் வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-11-04 22:00 GMT

விருத்தாசலம்,

திட்டக்குடி இளமங்கலத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 56). இவர், புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக உள்ளார். நேற்று முன்தினம் மாணிக்கம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெரம்பலூர் மாவட்டம் ஒகலூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் நேற்று காலையில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் வீட்டுக்குள் சென்றார். அங்கு பீரோவில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மற்றும் 6 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் விரைந்து சென்று, கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணிக்கம் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் மற்றும் ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்