முஸ்லிம் தீவிரவாதம் என்று பேசும் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாமீது வழக்கு தொடருவோம்; ஜவாஹிருல்லா பேட்டி
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர இருப்பதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
விருதுநகர்,
பொதுக்குழு கூட்டம் மனித நேய மக்கள் கட்சி யின் பொதுக்குழு கூட்டம் விருதுநகர் அருகிலுள்ள ஆவுடையாபுரத்தில் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–பாபர் மசூதி பிரச்சினைக்கு கோர்ட்டு மூலமே தீர்வு காண இயலும். டிசம்பர் 6–ந் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடித்து வருகிறோம். இந்து தீவிரவாதம் பற்றி கமல்ஹாசன் தெரிவித்த கருத்து எந்த அளவுக்கு தவறானதோ அந்த அளவுக்கு முஸ்லிம் தீவிரவாதம் என்று சொல்வதும் தவறு ஆகும். எந்த மதமும் தீவிரவாதத்துக்கு வழி காட்டுவதில்லை. சில அமைப்புகள் வேண்டுமானால் வன்முறையில் ஈடுபடலாம்.
கமல்ஹாசன் மீது உத்தரபிரதேசத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. தமிழகத்தில் முஸ்லிம் தீவிரவாதம் என்று எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜனதாகட்சியினர் பேசி வருகிறார்கள். இதுதொடர்பாக நாங்களும் வழக்கு தொடர இருக்கிறோம். மழை பிரச்சினை ஓய்ந்ததும் இந்த பிரச்சினையை கையில் எடுக்க இருக்கிறோம்.
சென்னையில் 2015–ல் ஏற்பட்ட மழை சேதத்தில் இருந்து அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியபின்னரே நிவாரணப்பணிகள் நடக்கிறது. சென்னையை சுற்றிலும் 13 ஆறுகளும் 40 ஏரிகளும் உள்ளன. இதனை உரிய முறையில் பராமரித்திருந்தால் சேதம் ஏற்பட்டிருக்காது. சோளிங்க நல்லூர், வேளச்சேரியில் நீர் நிலைகளில்தான் மருத்துவமனைகளும் அரங்கங்களும் உள்ளன. அந்த ஏரிகள் நிரம்பி இருந்தால் சென்னையில் 3 வருடத்துக்கு தண்ணீர் பிரச்சினையே இருந்திருக்காது.
வெள்ளை அறிக்கை குடிமராமத்து நடந்ததுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதைப்போல அரசு வெள்ளை அறிக்கைவெளியிட வேண்டும். வருகிற 8– ந் தேதி நடைபெறும் கருப்புதின ஆர்ப்பாட்டத்தில் நாங்களும் கலந்து கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.