மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பார்வர்டு பிளாக் பிரமுகர்– போலீஸ்காரர் பலி
மேலூர் அருகே நடந்த விபத்தில் பார்வர்டு பிளாக் கட்சி பிரமுகர், போலீஸ்காரர் ஆகியோர் பலியானார்கள்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள குறிச்சிப்பட்டியை சேர்ந்த சிவநாதனின் மகன் பாரதிராஜா(வயது 30). இவர் மதுரை 6–வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். நேற்று வீட்டுக்கு செல்வதற்காக மேலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இவரது மோட்டார் சைக்கிளின் முன்னே புதுமண தம்பதியரான ஆட்டுகுளத்தை சேர்ந்த சுரேந்திரன்(25), அவரது மனைவியுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் சூரத்தூர்பட்டியை சேர்ந்த அய்யாக்கண்ணு என்ற ராஜா(43) வந்தார். இவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவார். அப்போது புதுமண தம்பதிகள் சென்ற மொபட் நிலை தடுமாறியதில் எதிர்பாராதவிதமாக 3 இருசக்கர வாகனங்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயமடைந்த போலீஸ்காரர் பாரதிராஜா மற்றும் கட்சி பிரமுகர் ராஜா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த புதுமண தம்பதிகள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.