மரக்காணம் பகுதியில் பலத்த மழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

மரக்காணம் பகுதியில் பெய்த மழை காரணமாக 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. மேலும் 50–க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியது.

Update: 2017-11-04 22:15 GMT

விழுப்புரம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 27–ந் தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுந்து வாங்குவதால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த 27–ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் பருவமழை இன்னும் தீவிரம் அடையாத நிலையில் கடலோர பகுதிகளில் மட்டும் பலத்த மழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் மழை ஓய்ந்து வெயில் கொளுத்திய நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியுள்ளது.

விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நள்ளிரவு 12 மணிக்கு மழை பெய்யத்தொடங்கியது. பலத்த மழையாக பெய்யாமல் விட்டு விட்டு சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழை நேற்று காலை 8 மணி வரை நீடித்தது.

இதேபோல் திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மிதமான முறையில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது.

ஆனால் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான மரக்காணம், கந்தாடு, நடுக்குப்பம், அனுமந்தை, கூனிமேடு, வானூர், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பிறகும் விடிய, விடிய பரவலாக மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனுமந்தை, ஆத்திக்குப்பம், சாலையான்குப்பம் உள்பட 30–க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. மேலும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் குருவம்மாபேட்டை, முன்னூர், குரூர், ஆலத்தூர், கந்தாடு, ஆலங்குப்பம், ஆத்திக்குப்பம், கீழ்பேட்டை, கூணிமேடு, அடசல் உள்பட 50–க்கும் மேற்பட்ட ஏரிகள் தற்போது நிரம்பி வழிகிறது. இது தவிர பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே மழையில் மரக்காணம் அருகே வடகோட்டிபாக்கத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 185.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 49 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக செஞ்சியில் 4 மி.மீ. மழையும் பதிவாகியது. மற்ற பகுதிகளான திருக்கோவிலூரில் 9 மி.மீட்டரும், திண்டிவனத்தில் 12 மி.மீட்டரும், விழுப்புரத்தில் 40 மி.மீட்டரும், உளுந்தூர்பேட்டையில் 27.20 மி.மீட்டரும், வானூரில் 25 மி.மீட்டரும், சங்கராபுரத்தில் 10 மி.மீட்டரும்,

கள்ளக்குறிச்சியில் 9.40 மி.மீட்டரும் மழை பதிவானது.

மேலும் செய்திகள்