செல்லியம்பட்டி மாணவி தற்கொலை சம்பவத்தில் ஆசிரியரை கைது செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிங்கம்புணரி அருகே செல்லியம்பட்டியில் 8–ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில், அவளது சாவுக்கு காரணமாக ஆசிரியரை கைது செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2017-11-04 23:00 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே உள்ளது செல்லியம்பட்டி. இந்த ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்த சுமித்ரா என்ற மாணவி கடந்த மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பள்ளியில் பணியாற்றிய லாரன்ஸ் எட்வர்ட் என்ற ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் எழுந்தது. இந்தநிலையில் ஆசிரியர் லாரன்ஸ் எட்வர்ட் மற்ற மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு செய்ததாக ஜனநாயக மாதர் சங்கத்தினர் துணையுடன் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாணவி சாவு காரணமான ஆசிரியர் லாரன்ஸ் எட்வர்ட்டை கைது செய்யாததை கண்டித்து மாதர் சங்கத்தினர் நேற்று முன்தினம் சிங்கம்புணரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவிகளையும், பெண் ஆசிரியையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த லாரன்ஸ் எட்வர்ட்டை கைது செய்யாததை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அதிகாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா, மாநில பொறுப்பாளர் மல்லிகா ஆகியோர் உரையாற்றினர். இந்த வி‌ஷயத்தில் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் அதிகரிக்கும் என்று மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகபிரியா, தலைவர் காந்திமதி, துணைச்செயலாளர் மணியம்மா, பொருளாளர் பாக்கியலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்