உவரி அருகே கொன்று புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை

உவரி அருகே, கொன்று புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் துண்டு துண்டாக தோண்டி எடுக்கப்பட்டது.

Update: 2017-11-04 21:15 GMT
திசையன்விளை,

உவரி அருகே, கொன்று புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் துண்டு துண்டாக தோண்டி எடுக்கப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், தாசில்தார் முன்னிலையில் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

வாலிபரை கொன்று புதைப்பு


நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தலைவன்விளையை சேர்ந்தவர் லிங்கசாமி மகன் சுபாஷ் (வயது 31). அவரது மனைவி குடும்ப தகராறின் காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் அதே ஊரைச் சேர்ந்த முத்துசெல்வத்தின் மனைவி கிருஷ்ணவேணி என்பவருக்கு சுபாஷ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துச்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (31), விஜயகுமார் (28), செந்தில்குமார் (27) ஆகியோர் சேர்ந்து சுபாசை அடித்துக் கொன்றனர். பின்னர் அவரது உடலை உவரி அருகே குட்டம்–தோப்புவிளை இடையே கடற்கரையோரம் அமைந்துள்ள காட்டு பகுதியில் புதைத்தனர்.

இந்தநிலையில் முத்துச்செல்வத்தின் நண்பரான அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (31) என்பவரை ஒரு வழக்கில், உவரி போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில், சுபாஷ் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து அவரையும், மற்றொரு நண்பர் செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

உடல் தோண்டி எடுப்பு

நேற்று கண்ணனை போலீசார், சுபாஷ் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுபாஷ் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர் அடையாளம் காட்டினார். இதையொட்டி ராதாபுரம் தாசில்தார் ரவிகுமார் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்திருந்தனர். தாசில்தார் முன்னிலையில் சுபாஷ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது சுபாசின் உடலானது, கை தனியாக, கால் தனியாக என பல்வேறு பாகங்களாக துண்டு துண்டாக கிடைத்தது.

இதுதொடர்பாக கண்ணனிடம் போலீசார் நடத்திய மேல் விசாரணையில், சுபாசை ஊரில் வைத்தே அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டியதும், உடல் பாகங்களை ஒரு வாளியில் கொண்டு வந்து இங்கு புதைத்ததும் தெரியவந்தது.

சுபாஷ் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அங்கேயே தாசில்தார் முன்னிலையில் டாக்டர்கள் பிரேத பரிசோதனை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள முத்துசெல்வம், விஜயகுமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்