நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை: அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

Update: 2017-11-04 20:45 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

தொடர் மழை

வடகிழக்கு பருவமழையால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லையில் நேற்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. மாலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் திடீரென்று பலத்த மழை பெய்தது.

இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. பாபநாசம், கருப்பாநதி அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இதையொட்டி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 76.30 அடியில் இருந்து 77.05 அடியாக நேற்று உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 759 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு, அணை மூடப்பட்டு உள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 90 அடியில் இருந்து 91 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 56 அடியில் இருந்து 56.40 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 189 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

கடனாநதி அணைக்கு வரக்கூடிய 100 கன அடி தண்ணீர் அப்படியே திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணை நீர்மட்டம் 63 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. ராமநதி அணை நீர்மட்டம் 57.50 அடியாகவும், கருப்பாநதி அணை 59.77 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 3.25 அடியாகவும், நம்பியாறு அணை 19.36 அடியாகவும், கொடுமுடியாறு அணை 49 அடியாகவும், அடவிநயினார் அணை 100.25 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் உபரி நீர் வெளியேறுகிறது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–

கருப்பாநதி –10, பாபநாசம் –3, மணிமுத்தாறு –2, அடவிநயினார் –2, செங்கோட்டை –2, சேர்வலாறு –1.

கால்வாய்களில் தண்ணீர் திறப்பு

அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட போதிலும், காட்டாற்று வெள்ளம் மற்றும் ஊர் பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் செல்கிறது.

இந்த தண்ணீர் கால்வாய்களில் திறக்கப்பட்டு குளங்களை நிரப்பும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கோடகன் கால்வாயில் வினாடிக்கு 86 கன அடி, பாளையங்கால்வாயில் 204 கன அடி, நெல்லை கால்வாயில் 100 கன அடி, மருதூர் மேல கால்வாயில் 1,390 கன அடி, மருதூர் கீழ கால்வாயில் 400 கன அடி, ஸ்ரீவைகுண்டம் தெற்கு கால்வாயில் 1,1,70 கன அடி, வடக்கு கால்வாயில் 1,093 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்