ரெயில்வே திட்ட பணிகள் குறித்து கலெக்டருடன் மண்டல மேலாளர் ஆலோசனை
ரெயில்வே திட்ட பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டருடன் ரெயில்வே மண்டல மேலாளர் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி,
ரெயில்வே திட்ட பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டருடன் ரெயில்வே மண்டல மேலாளர் ஆலோசனை நடத்தினார்.
புதிய வழித்தடம்தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 3 கட்டங்களாக பணிகள் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக மீளவட்டான் முதல் மேலமருதூர் வரையிலும், 2–வது கட்டமாக மேலமருதூர் முதல் அருப்புக்கோட்டை வரையிலும், 3–வது கட்டமாக அருப்புக்கோட்டை முதல் மதுரை வரையிலும் பணிகள் நடைபெற உள்ளது.
இதற்காக சாமிநத்தம், சில்லாநத்தம், வாலசமுத்திரம், தெற்கு வீரபாண்டியபுரம், மேலமருதூர், வடக்கு சிலுக்கன்பட்டி ஆகிய 6 கிராமங்களில் தனியார் நிலம் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இதில் தனியார் நிலங்கள் 71 எக்டேரும், அரசு நிலங்கள் 3.778 எக்டேரும் கையகப்படுத்தப்பட உள்ளது.
ஆலோசனைஇந்த ரெயில்வே திட்ட பணிகள் குறித்து நேற்று காலையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வெங்கடேசுடன், ரெயில்வே மண்டல மேலாளர் நீனு இட்டாயா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், ரெயில்வே பணிகளுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவது, ரெயில்வே தண்டவாளம் அமைப்பதற்கான அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்திக்கொடுக்குமாறு கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை கோட்ட செயற்பொறியாளர் சந்துரு, உதவி செயற்பொறியாளர் தனராமன், உதவி பொறியாளர் முத்துகுமார் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.