கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்படுத்தினால் வழக்கு கலெக்டர் எச்சரிக்கை

கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்படுத்தினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-11-03 22:30 GMT

புதுச்சேரி,

புதுவையில் மழைக்காலம் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் கழிவுநீர் வாய்க்கால்களில் ஆங்காங்கே கழிவுகளை கொட்டியும், கட்டுமானப் பொருட்களை வைத்தும் சிலர் அடைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் மழைநீர் வாய்க்கால்களில் தடையின்றி செல்ல முடியாமல் தேங்கி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது.

இதுபற்றி தெரியவந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நேற்று முன்தினம் புதுவை நகரப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மழைக்காலத்தையொட்டி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். கலெக்டர் சத்தியேந்திர சிங் துர்சாவத்தும் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார்.

இதுதொடர்பாக கலெக்டர் சத்யேந்திர சிங் துர்சாவத் வெளியிட்டுள்ள உத்தரவில், கழிவுநீர் வாய்க்கால்களை யாராவது அடைத்து வைத்து இருந்தால் 24 மணிநேரத்திற்குள் அவற்றை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மூலம் அபராதம் விதித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் வழக்கும் பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்