சென்னையில் டிசம்பர் மாதம் தொழில் முதலீட்டாளர் மாநாடு நாராயணசாமி தகவல்
சென்னையில் வருகிற டிசம்பர் மாதம் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
இந்திய தொழில் கூட்டமைப்பின் புதுச்சேரி கிளை சார்பில் மனிதவளம் குறித்த கருத்தரங்கு சன்வே ஓட்டலில் நேற்று நடந்தது. கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
சீனாவில் மாணவர்கள் பல்வேறு திறமைகளுடன் உருவாக்கப்படுகின்றனர். அதனால்தான் சீனா வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. ஆனால் நாம் தாமதமாகவே விழித்துக்கொண்டோம். இந்தியாவில் பலருக்கு சரியான வேலை கிடைப்பதில்லை. அதாவது தொழில்நுட்பம் படித்தவருக்கு எழுத்தர் பணி கிடைக்கிறது. தகுதியானவர்களுக்கு சரியான பணி வழங்கும்போது சிறந்த உற்பத்தி கிடைக்கும்.
பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக சிறு நிறுவனங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்குக்கூட அதிக வரி விதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அதிக அளவில் வரி வசூலிக்கப்படுகிறது.
மக்களிடம் திறமையை வளர்க்க புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளும் இந்த விஷயத்தில் துறைகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். கடந்த ஆண்டு 7 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை துறைமுகம் கடும் நெரிசலில் சிக்கியுள்ளதால் புதுச்சேரி அரசும் சென்னை துறைமுகமும் இணைந்து புதுச்சேரிக்கு சரக்குகளை கொண்டுவந்து தென்மாநிலங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் வருகிற டிசம்பர் மாதம் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. புதுவையில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் உள்ளூரை சேர்ந்த 60 சதவீத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.