செங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது; படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்பு

செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலவாயல் அடுத்த சன்சிட்டி கார்டன், குமரன்நகர் ஆகிய பகுதிகளில் 80–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

Update: 2017-11-03 22:30 GMT

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலவாயல் அடுத்த சன்சிட்டி கார்டன், குமரன்நகர் ஆகிய பகுதிகளில் 80–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கொட்டி தீர்த்த மழையில் 40–க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் வீடுகளில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நேற்று காலை அம்பத்தூர் ஆர்.டி.ஓ. அரவிந்தன், மாதவரம் தாசில்தார் ரமேஷ், செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுரேந்தர், செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் மற்றும் அதிகாரிகள் சன்சிட்டி கார்டன், குமரன் நகர் ஆகிய பகுதிகளுக்கு படகுகளில் சென்றனர். அங்கு தத்தளித்து கொண்டிருந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். வெள்ளம் பாதித்த பகுதியில் சிக்கிய மீதம் உள்ளவர்களையும் மீட்டு உரிய வசதிகள் செய்துகொடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். துணை தாசில்தார் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர்கள் வினோத்குமார், கார்த்திக் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்