உவரி அருகே பயங்கரம்: பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கொன்று புதைப்பு

உவரி அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கொன்று புதைக்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்ணின் கணவர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2017-11-03 23:15 GMT

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தலைவன்விளையை சேர்ந்தவர் லிங்கசாமி. இவரது மகன் சுபாஷ்(வயது 31). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ளார். குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த முத்துசெல்வத்தின் மனைவி கிருஷ்ணவேணி என்பவருக்கு சுபாஷ் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அறிந்த முத்துசெல்வம், சுபாசை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் கேட்கவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் சுபாஷ், கிருஷ்ணவேணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துசெல்வம் இதற்கு ஒரே வழி சுபாசை தீர்த்து கட்டுவதுதான் என்று முடிவு செய்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.

அதன்படி சம்பவத்தன்று முத்துச்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் மகன் கண்ணன்(31), முத்து மகன் விஜயகுமார்(28), சித்திரரைவேல் மகன் செந்தில்குமார்(27) ஆகியோர் சேர்ந்து சுபாசை மினி லாரியில் கடத்திச் சென்றுள்ளனர்.

உவரி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட குட்டம்– தோப்புவிளை இடையே கடற்கரையோரம் காட்டு பகுதிக்கு கொண்டு சென்ற அவர்கள், சுபாசை அடித்து உதைத்து கொன்று அங்கேயே குழி தோண்டி புதைத்து விட்டனர்.

சுபாஷ் சரிவர வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அவ்வப்போது மட்டும் வீட்டுக்கு வந்து செல்வார். இதனால் அவர் காணாமல் போனது பற்றி அவரது குடும்பத்தினர் போலீசில் ஏதும் புகார் செய்யவில்லை.

இந்த நிலையில் உவரி போலீசார் முத்துசெல்வத்தின் நண்பர் கண்ணனை மற்றொரு வழக்கில் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில், சுபாஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட தகவல்கள் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கண்ணனை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கடற்கரை பகுதியில் சுபாஷ் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்ணன் அடையாளம் காட்டினார்.

இதையடுத்து இதுதொடர்பாக உவரி போலீசில் கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் முத்துச்செல்வம், விஜயகுமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை செய்து புதைக்கப்பட்ட சுபாஷ் உடல் இன்று(சனிக்கிழமை) ராதாபுரம் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. இதையொட்டி சுபாஷ் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகே நேற்று இரவு முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சுபாஷ், ஏற்கனவே கடந்த மாதம் திசையன்விளையில் தசரா விழாவையொட்டி தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்